×

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப கோரிய வழக்கு சபாநாயகருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? அதிமுக தரப்புக்கு தலைமை நீதிபதி கேள்வி

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது தொடர்பான வழக்கில், சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா எனக் அதிமுக கொறடா வேலுமணி தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சியின் ஜெகதீஸ்வரன், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டமன்ற நிகழ்வுகள் பகுதி பகுதியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பேச்சுக்கள் முழுமையாக ஒளிபரப்பு செய்யாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், டிஜிட்டல் யுகத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என்று அரசு தரப்பிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது சாத்தியமற்றது. சில நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்றார்.

அதிமுக கொறடா வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நாடு முழுவதும் சட்டமன்றங்களின் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தேசிய இவிதான் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இதுசம்பந்தமாக தீர்ப்பு நகல்களை தாக்கல் செய்ய எஸ்.பி.வேலுமணி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப கோரிய வழக்கு சபாநாயகருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? அதிமுக தரப்புக்கு தலைமை நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Adimuka Korada ,Court ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து